
புகைப்படம்: பெனாமா
Advertisement
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மலேசியாவில் 11 வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயிக்கும் தீபாவளி சிறப்பு விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் (SHMMP) நவம்பர் 4 முதல் 10ஆம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ளது.
கடந்த ஆண்டு ஒன்பது வகையான பொருட்கள் இத்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற நிலையில், இவ்வாண்டு தேங்காய்ப் பால் மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஆகிய இரண்டு புதிய பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், தீபாவளிக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதுடன், நுகர்வோரின் தேவைகளையும் சிறப்பாகப் பூர்த்தி செய்ய முடியும் என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி தெரிவித்துள்ளார்.
ஏழு நாள்களுக்கு அமல்படுத்தப்படும் இத்திட்டம், பண்டிகைக்கு நான்கு நாள்களுக்கு முன்பும், பண்டிகை நாளன்றும், அதற்குப் பிந்தைய இரண்டு நாள்களிலும் நடைமுறையில் இருக்கும்.
இவ்வாண்டு தீபகற்ப மலேசியாவில் தேங்காய், துருவிய தேங்காய், பெரிய வெங்காயம், இந்தியச் சிறிய வெங்காயம் மற்றும் ஆஸ்திரேலியப் பருப்பு ஆகிய ஐந்து பொருட்களின் அதிகபட்ச விலையில் சரிவு பதிவாகியுள்ளது.
இருப்பினும், இறக்குமதி செய்யப்படும் எலும்புடன் கூடிய ஆட்டிறைச்சியின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் தீபகற்ப மலேசியா, சபா, சரவாக் மற்றும் லாபுவான் கூட்டரசுப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், நிர்ணயிக்கப்பட்ட விலைகளை வணிகர்கள் பின்பற்றுவதை உறுதிசெய்ய, பொதுச் சந்தைகள், உழவர் சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவர்.
மேலும், கட்டுப்பாட்டின் கீழுள்ள பொருட்களுக்கு வணிகர்கள் இளஞ்சிவப்பு நிற விலைக் குறியீட்டைக் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது 2011ஆம் ஆண்டின் விலைக் கட்டுப்பாடு மற்றும் ஆதாயத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
தீபாவளி 2026 விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் இடம்பெறும் 11 பொருட்கள்:
பெரிய வெங்காயம்
இந்தியச் சிறிய வெங்காயம்
இந்தியச் சிறிய வெங்காயம் (ரோஸ் வகை)
சிவப்பு மிளகாய்
இறக்குமதி செய்யப்படும் எலும்புடன் கூடிய ஆட்டிறைச்சி
ஆஸ்திரேலியப் பருப்பு
தேங்காய்
துருவிய தேங்காய்
தேங்காய்ப் பால் (புதியது)
தக்காளி
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு (புதியது)