
கிளந்தான், குவா மூசாங் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்காக கம்போங் பத்து 5 சமூக மண்டபத்தில் தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது.
கம்போங் பத்து 2, கம்போங் பத்து 5, கம்போங் பத்து 6 மற்றும் குவா மூசாங் – ஜெலாவாங் சாலை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதற்கிடையில், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, குடிமைத் தற்காப்புப் படையினர் (APM) பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண மையத்தில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, தேவையான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நிலைமையைக் கண்காணித்து வருவதுடன், தேவைப்பட்டால் மக்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மலேசிய வானிலை ஆய்வுத் துறை இன்று காலை 6.45 மணிக்கு கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மூலம்: பெர்னாமா