Skip to main content

Advertisement

நிதி ஆலோசனை வழங்கிய ஹரிஷ் தற்கொலை: யூட்யூபர் ஜேசன் சாமுவேல் கைது - காவல்துறை கூறுவது என்ன?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.)

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நிதி சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வந்த 27 வயதான ஹரிஷ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, யூட்யூபர் ஜேசன் சாமுவேலை தாம்பரம் மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இணையவழித் துன்புறுத்தல் காரணமாகவே தனது மகன் உயிரிழந்ததாக ஹரிஷின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில், பிஎன்எஸ் சட்டத்தின் 108வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட ஜேசன் சாமுவேல் அடுத்த கட்டமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட இருப்பதாகவும் காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ஹரிஷ்?

புதுச்சேரியின் ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்த 27 வயதான ஹரிஷ். சென்னை அருகே கானத்தூரில் வசித்து வந்தார். 'ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்' (Finance with Harish) என்ற பெயரில் சமூக ஊடகங்களில் நிதி மற்றும் முதலீடு தொடர்பான காணொளிகளைப் பதிவிட்டு வந்தார்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். பணக்காரர்களுக்கு நிதி நிர்வாகம் மேற்கொள்வதாகவும், அதிக நிகர சொத்து மதிப்பு கொண்டவர்களுக்கு நிதி ஆலோசகராகச் செயல்படுவதாகவும் தனது பக்கத்தின் விவரணையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) பதிவு இல்லாமல் ஹரிஷ் முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவதாக சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுந்தன. அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில், நிதி சார்ந்த உள்ளடக்கங்களை வெளியிடும் சமூக ஊடக பிரபலங்கள் குறித்து யூட்யூபர் ஜேசன் சாமுவேல் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஹரிஷின் நிதி ஆலோசனைகள் மற்றும் செபி பதிவு தொடர்பான கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார்.

ஹரிஷ்
Instagram/Finance with Harish
ஹரிஷ்

தந்தை அளித்த புகாரில் கூறியது என்ன?

காவல்துறையின் செய்தி வெளியீட்டின்படி, ஹரிஷ் 2026 அக்டோபர் 20ஆம் தேதி தற்கொலை மூலம் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஹரிஷின் தந்தை விநாயகம் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சமூக ஊடகங்களில் தனது மகன் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டு, இணையவழித் துன்புறுத்தல் மூலம் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக ஜேசன் சாமுவேல் மீதும், அவருக்கு உடந்தையாகச் செயல்பட்டவர்கள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

மேலும், தனது மகன் உயிரிழப்பதற்கு முன்பாகக் காணொளி ஒன்றைப் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அதில் ஜேசன் சாமுவேல் குறித்து ஹரிஷ் குற்றம் சாட்டியிருந்ததாகவும் தந்தை தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், கானத்தூர் காவல் நிலையத்தில், பிஎன்எஸ் 108வது பிரிவின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தப் பிரிவு தற்கொலைக்குத் தூண்டுதல் தொடர்பான குற்றத்தைக் கையாள்கிறது.

காவல்துறை கூறுவது என்ன?

இந்த வழக்கின் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில், ஹரிஷின் தற்கொலைக்குக் காரணமானவராக ஜேசன் சாமுவேல் இருக்கக்கூடும் எனத் தெரிய வந்ததாக காவல்துறையின் செய்தி வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், காவல்துறையின் இந்தக் குற்றச்சாட்டு விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டது.

இதன் அடிப்படையில், 30 வயதான ஜேசன் சாமுவேலை காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஜேசன் சாமுவேல் அளித்த விளக்கம் என்ன?

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஜேசன் சாமுவேல், ஹரிஷை இணையவழியில் துன்புறுத்தவில்லை என்றும், அவருடைய செபி பதிவு மற்றும் நிதி ஆலோசனைகள் தொடர்பான கேள்விகளை மட்டுமே எழுப்பியதாகவும் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஹரிஷ் முறையான செபி பதிவைப் பெறாமல் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கியதாகவும், பரஸ்பர நிதி விநியோகஸ்தர்களுக்கான ஏ.ஆர்.என். (ARN) பதிவு தொடர்பாகத் தவறான தகவல்களை வழங்கியதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். முறையான பதிவைப் பெற்ற பின்னர் ஆலோசனைகளை வழங்குமாறு ஹரிஷிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறியிருந்தார்.

இந்தச் சம்பவம் தனக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இத்தகைய முடிவு ஏற்படும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹரிஷின் மரணம் தொடர்பான வழக்கில் காவல்துறையின் விசாரணை, முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், ஜேசன் சாமுவேலின் விளக்கம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றுள்ளன. சமூக ஊடகங்களில் நிதி ஆலோசனைகளை வழங்குவதற்கான விதிமுறைகள் குறித்த விவாதத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளது.

முக்கிய குறிப்பு

மன உளைச்சல் அல்லது மனநலப் பிரச்னைகளை எதிர்கொள்பவர்கள் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை, உளவியல் ஆதரவு உள்ளிட்ட உதவிகளைப் பெறலாம்.

டெலி-மானஸ் (Tele-MANAS) மனநல உதவி எண்: 14416 (24 மணிநேரமும் செயல்படும்).

சினேகா உதவி மையம்: 044-24640050 (தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை).

தமிழ்நாடு மருத்துவ உதவி எண்: 104 (24 மணி நேரமும் செயல்படும்).

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!