Skip to main content

Advertisement

Health & Fitness

குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரின் உடல் பருமனைக் கட்டுப்படுத்த புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உலக சுகாதார நிறுவனம்

புகைப்படம்: பொகோட்டா மற்றும் வைட்டல் ஸ்ட்ராட்டஜீஸ் 

குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரிடையே அதிகரித்து வரும் உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதற்கான தனது முதல் உலகளாவிய வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில், உலகளவில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட 17 கோடி பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டிலிருந்து இவ்வயதினரிடையே உடல் பருமன் பாதிப்பு நான்கு மடங்காக அதிகரித்து, 2 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Advertisement

உடல் பருமன் என்பது நீண்டகால நோயாகும். இது வகை 2 நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதுடன், குழந்தைகளின் மனநலத்தையும் பாதிக்கக்கூடும்.

உடல் பருமனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடல் செயல்பாடுகள் மற்றும் நடத்தை மாற்றங்களை உள்ளடக்கிய சிகிச்சைகளை வழங்க WHO பரிந்துரைத்துள்ளது. 9 வயது வரையிலான குழந்தைகளுக்கு உடல் எடையைக் குறைக்கும் மருந்துகள் மற்றும் அறுவைச் சிகிச்சைகளைப் பரிந்துரைக்கவில்லை. 10 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கு, குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் மருந்துகள் அல்லது அறுவைச் சிகிச்சைகள் பரிசீலிக்கப்படலாம்.

உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதற்கான அடிப்படை அணுகுமுறை மருந்துகள் அல்லது அறுவைச் சிகிச்சை மட்டுமல்ல; ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடல் செயல்பாடு மற்றும் நீடித்த நடத்தை மாற்றங்களை ஊக்குவிக்கும் விரிவான ஆதரவை வழங்குவதே முக்கியம் என உலக சுகாதார நிறுவனத்தின் ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை இயக்குநர் டாக்டர் லூஸ் மரியா டி ரெகில் தெரிவித்துள்ளார்.

உடல் நலத்துடன் மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என WHO வலியுறுத்தியுள்ளது. மேலும், ஆரோக்கியமான உணவுகளை மலிவாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் மாற்றுவதுடன், உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்கவும் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

பெரியவர்களுக்கான ஏற்கெனவே உள்ள பரிந்துரைகளுடன் இணைந்து, குழந்தைப் பருவம் முதல் முதிர்வயது வரை உடல் பருமனைத் தடுப்பதற்கும் கையாள்வதற்கும் இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் உதவும்.

இணைப்பு: உடல் பருமனைத் தடுப்பதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் விரைவுச் செயல்திட்டம்

மூலம்: உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) இணையதளம்