
ஜெர்மனியில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் திட்டம் உட்பட, இணையவழியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கை வழிகாட்டுதல்களுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் வரை, 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தேசிய அளவில் இடைக்காலத் தடை விதிக்கும் திட்டத்திற்கு ஜெர்மனி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisement
இணையவழி ஆபத்துகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பது, டிஜிட்டல் சாதனங்களைத் திறம்படப் பயன்படுத்துவதற்கான அவர்களின் திறன்களை மேம்படுத்துவது மற்றும் டிஜிட்டல் உலகில் அவர்கள் பங்கேற்பதை ஊக்குவிப்பது ஆகியவற்றில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது. கடந்த மாதம் 56 பரிந்துரைகளை முன்வைத்த சுயாதீன நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“ஆய்வுகள் நிறைவடைந்துவிட்டன. இப்போது அவற்றைச் செயல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தப் புதிய கட்டமைப்பின் மூலம், சிறுவர்களும் இளைஞர்களும் டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வளர்வதற்கான அடித்தளத்தை மத்திய அரசு அமைக்கிறது,” என்று கல்வி மற்றும் குடும்ப விவகாரங்களுக்கான அமைச்சர் கரின் பிரியன் தெரிவித்துள்ளார்.
“பாதுகாப்பு, அதிகாரமளித்தல் மற்றும் பங்கேற்பு ஆகியவை எங்களின் பொறுப்புகளாகும். குறிப்பாக, இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையில் இணையம் நீண்டகாலமாக ஓர் அங்கமாக இருந்து வருகிறது. எனவே, அவர்களை டிஜிட்டல் உலகிலிருந்து விலக்கி வைப்பதற்குப் பதிலாக, அதன் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் மனவலிமையையும் அவர்களிடம் வளர்க்க விரும்புகிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய விதிமுறைகளின்படி, 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் டிக்டாக் (TikTok), ஸ்னாப்சாட் (Snapchat) மற்றும் படவரி (Instagram) போன்ற சமூக ஊடகங்களைப் பொதுவாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். சிறுவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தளங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். 13 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு வயதின் அடிப்படையில் வெவ்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், 2027ஆம் ஆண்டு முதல் நம்பகமான வயது சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்த ஜெர்மனி திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஜெர்மனியில் “d-you” என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் அடையாளப் பணப்பைத் திட்டத்தைச் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்கிடையில், சமூக ஊடகங்களைத் தொடர்ந்து பயன்படுத்தத் தூண்டும் மற்றும் அடிமைத்தனத்தை ஏற்படுத்தக்கூடிய வடிவமைப்புகளை இயல்புநிலையாகக் கொண்டுள்ள டிஜிட்டல் தளங்களில் மாற்றங்களைச் செய்யுமாறு ஜெர்மனி வலியுறுத்தவுள்ளது
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறுவர் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது, படிமுறை அடிப்படையிலான உள்ளடக்கப் பரிந்துரை அமைப்புகளை இயல்புநிலையாக முடக்கவும், முடிவில்லாமல் திரையை உருட்டும் வசதி மற்றும் கட்டுப்பாடற்ற பயன்பாடு போன்ற பழக்கங்களைத் தூண்டும் அம்சங்களைத் தடுக்கவும் ஜெர்மனி வலியுறுத்தவுள்ளது.
மூலம்: பெர்னாமா