இந்தியாவில் தங்கத்தில் ரீனியம் என்ற உலோகம் கலக்கப்படுவதாகவும், அதனால் வாடிக்கையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் வெளியான தகவலைத் தொடர்ந்து, தங்க கலப்படம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளது.
தங்கம், ரீனியம் இரண்டின் உருகுநிலைக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதால் தங்கத்தில் ரீனியத்தைக் கலப்பது சாத்தியமில்லை என்று தங்கநகை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். தங்கத்தில் கலப்படம் இருந்தால் அதை தற்போதுள்ள எக்ஸ்ஆர்எஃப் மற்றும் பிஐஎஸ் சோதனைகளில் கண்டுபிடித்துவிட முடியும் என்பதால் கலப்படம் நடக்க வாய்ப்பில்லை என்பது இவர்களின் வாதமாகவுள்ளது.
ஆனால் ரீனியத்தைப் பொடியாக்கி தங்கத்தில் கலப்பது சாத்தியம் என்று விளக்குகின்றனர் வேதியியல் துறை மற்றும் நானோ டெக்னாலஜி பேராசிரியர்கள்.
இவற்றை எக்ஸ்ஆர்எஃப் போன்ற உபகரணங்களால் கண்டறிய முடியாது என்று கூறும் இவர்கள், அதைக் கண்டுபிடிக்க ''எப்மா'' போன்ற வேறு விதமான உபகரணங்கள் இருப்பதாக விளக்குகின்றனர். தங்கக் கலப்படத்தைக் கண்டறிய மண்டல வாரியாக மையத்தை அமைக்கலாம் என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு இவர்கள் வழங்கும் ஆலோசனையாகவுள்ளது.
தங்கத்தில் ரீனியம் கலப்படம் - எங்கேயிருந்து கிளம்பியது இந்த தகவல்?
இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தில் ரீனியம் என்ற உலோக கலப்படம் நடப்பதாகவும், ரீனியம் கலந்த தங்கத்துக்கு 'ஹால்மார்க்கிங்' சான்று தரப்பட்டுள்ளதாகவும், கலப்படத்தை பரிசோதனை இயந்திரத்தால் கண்டறிய முடியவில்லை என்றும் 'டைனிக் பாஸ்கர்' செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவிலிருந்து ரீனியம் பொடி வருவதாகவும், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் முகவர்கள் இருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
'டைனிக் பாஸ்கர்' வெளியிட்ட செய்தியின்படி, இந்த உலோகப்பொடியை சீனாவிலிருந்து அனுப்பும் முகவரிடம் இந்த ஊடகத்தின் செய்தியாளர் பேசியபோது, தங்கத்தில் 25 சதவீதம் வரை ரீனியம் பொடியைக் கலந்தாலும் யாராலும் கண்டறிய முடியாது என்று அவர் கூறியிருக்கிறார்.
மும்பையிலிருந்து ஒரு முகவரிடம் ரீனியம் பொடியை இந்தச் செய்தி நிறுவனம் 100 கிராம் ரூ.5300க்கு (கூரியர் கட்டணம் ரூ.300 உட்பட) வாங்கியுள்ளது.
அதன்பின்பு அந்தப் பொடியை 7.830 கிராம் எடையுள்ள 24 காரட் தூய தங்கத்துடன் கலந்தபோது, அது 8.830 கிராமாக அதிகரித்தது. சோதனையில் அந்த கலவை 24-காரட் தங்கம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதனுடன் 0.75 கிராம் வேறொரு உலோகத்தைச் சேர்த்து 22 காரட் நகையைத் தயாரித்துள்ளனர். ராஜஸ்தானிய ராஜபுதன பாணியிலான 'தேசி ஆட்' எனப்படும் இந்த ஆபரணம், 9.580 கிராம் எடையுடன் உருவாக்கப்பட்டது.
உண்மையில் அதிலிருந்த தங்கத்தின் எடை 7.830 கிராம் ஆகவும், 20 காரட் தங்கமாகவும், அதன் தூய்மைத் தன்மை 81.73 சதவீதமாகவும் மட்டுமே இருந்த நிலையில், ''ஹால் மார்க்கிங்'' மையம் உள்ளிட்ட 6 சோதனைகளிலும் அதில் ரீனியம் கலந்திருப்பது கண்டறியப்படவில்லை என்று 'டைனிக் பாஸ்கர்' கூறியுள்ளது.
மாறாக புகழ்பெற்ற ஹால்மார்க் மையத்தில் பரிசோதிக்கப்பட்டபோது, அதற்கு '92K916' என்ற ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டதாகவும், அது 22 காரட் தங்கம் என்றும், தூய்மைத்தன்மை 91.6 சதவீதம் என்றும் சோதனை அறிக்கை தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் விளக்கப்பட்டுள்ளது.
ஒரு நகைக்கடையில், காரட் கண்டறியும் இயந்திரத்தைப் பயன்படுத்திச் சோதித்தபோது, திரையில் தங்கம் 93.70%, வெள்ளி 5.39% மற்றும் தாமிரம் 0.90% எனத் தெரிந்ததாகவும், ரீனியம் குறித்த எந்தக் குறிப்பும் இல்லை என்றும், பிரபல நகைக்கடைகளில் இருந்த இயந்திரங்களும் இதைக் கண்டறியவில்லை என்றும், அதனை 22-காரட் தங்கத்திற்கான விலையில் வாங்க கடைக்காரர்கள் தயாராயிருந்ததாகவும் அச்செய்தி கூறியுள்ளது.
'டைனிக் பாஸ்கர்' செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தங்கத்தில் ரீனியம் கலப்படம் என்ற தகவல் பரவி விவாதப் பொருளானது.
கோயம்புத்தூர் தங்கநகை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தரும் தகவலின்படி, கோவையில் மட்டும் ஆயிரக்கணக்கான தங்கநகை தொழிற்கூடங்களில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர்.
இதன் காரணமாகவே கோவை குறிச்சியில் தங்கநகை தொழில் பூங்கா ஒன்று அமைக்க முந்தைய திமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது பரவி வரும் தங்கத்தில் ரீனியம் கலப்படம் என்ற தகவல், கோவை தங்கநகைத் தொழிலிலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளதாக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
கோவையிலுள்ள ஒரு நகைக்கடையில் நகை வாங்க வந்திருந்த ஷோபிகாவிடம் பிபிசி பேசியது. பழைய நகைகளை மாற்றி, புதிய நகை வாங்க வந்திருந்ததாகக் கூறிய அவர், ''தங்கம் விலை மாற்றம் கண்டிருப்பதால் பழைய நகைகளைக் கொடுத்துவிட்டு, புதிய நகைகளை வாங்கலாம் என்று வந்திருக்கிறேன். என்னைப் போலவே பலரும் நகை வாங்க வந்திருக்கிறார்கள். ஆனால் தங்கத்தில் ரீனியம் கலப்பதாகப் பரவிய தகவலால் கொஞ்சம் பயம் ஏற்பட்டிருக்கிறது.'' என்றார்.
''அந்தக் காலத்தில் இருந்தே கோவை தங்கம் என்றால் தரமாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது. இருந்தாலும் அவர்களிடம் வாங்கும் தங்கம் கலப்படமற்றது என்பதை துல்லியமாகக் கண்டறியும் சோதனை உபகரணங்களை வாங்கி தங்கத்தின் தரத்தை நகைக்கடைக்காரர்கள் உறுதிப்படுத்தினால் இன்னும் அதிக நம்பிக்கையுடன் நகை வாங்கலாம்.'' என்றார் ஷோபிகா.
24 காரட் தங்கம் எப்படி 22 காரட் தங்கமாகிறது?
கோவை தங்கநகை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் 550 உறுப்பினர்களும், 130 இளைஞர் அணி உறுப்பினர்களும் இருப்பதாகக் கூறும் இச்சங்கத்தின் பொருளாளர் விக்னேஷ், கோவையில் மட்டும் ஒரு நாளுக்கு 100 முதல் 200 கிலோ வரை தங்க நகை உற்பத்தி செய்வதாகவும், மாதத்தில் 3 முதல் 4 டன் வரை உற்பத்தி நடப்பதாகவும் தெரிவித்தார். அனைத்து நகைகளுமே பிஐஎஸ் தரத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன என்கிறார் அவர்.
பிபிசியிடம் பேசிய விக்னேஷ், ''தங்கநகை தொழிலில் காட்மியம், இரிடியம் என ஏதாவது ஒரு கலப்படம் குறித்து அவ்வப்போது இப்படி தகவல்கள் பரவும். ஆனால் கோவையைப் பொருத்தவரை, தரமான தங்கம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கே தரத்தை உறுதி செய்வதற்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தங்கத்தில் கலப்படம் இருந்தால் கட்டாயம் தெரிந்துவிடும். அதுமட்டுமின்றி பிஐஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து நகைக்கடைகளில் அதிரடி ஆய்வு செய்கின்றனர். ஏதாவது ஒரு நகைக்கடையில் தங்கத்தில் கலப்படம் இருந்திருந்தால் வெளியில் தெரிந்திருக்கும்.'' என்றார்.
தங்கநகை தயாரிப்புக்கு முன்பாக, ஆபரணத்துக்கான தங்கம் எப்படி தயாராகிறது, எப்படி தரம் சோதிக்கப்படுகிறது என்பதை விளக்கினார் கோவையில் தங்கநகை தொழிற்கூடம் மற்றும் நகைக்கடைகளை நடத்தி வரும் சாய் பிரசாந்த்.
இவர், கோயம்புத்தூர் தங்கநகை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இளைஞர் அணி நிர்வாகியாகவும் உள்ளார்.
தினமும் அன்றைய விலை நிலவரத்தை வைத்து, 24 காரட் தங்கக்கட்டிகளை தங்கநகை உற்பத்தியாளர்கள் விலைக்கு வாங்கி வருகின்றனர். கட்டியாகவுள்ள அந்த தங்கத்தை தங்கநகை தொழிற்கூடத்தில் மின்சார உலையில் அதிக வெப்பத்தைத் தாங்கும் குடுவைக்குள் போட்டு, 1100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை நிர்ணயித்து அதை சூடேற்றுகின்றனர்.
உலையின் வெப்பநிலை 600 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டும்போது, தங்கம் உருகத் துவங்குகிறது. அப்போது காப்பர், வெள்ளி ஆகியவற்றையும், ஆபரணம் செய்ததில் மீதமான தங்கத்தகடுகளையும் குடுவைக்குள் போடுகின்றனர்.
உருகிய நிலையில் இருக்கும் தங்கத்தை எடுத்து, காடிகளில் ஊற்றி 22 காரட் தங்கக்கட்டியாக எடுக்கின்றனர்.
அதில் 1.5 – 2 கிராம் அளவில் தங்கத்தை எடுத்து அதை ஓர் இயந்திரத்தில் கொடுத்து தட்டையாக மாற்றுகின்றனர். பின்பு கண்ணாடிக் குடுவையில் ராஜதிராவகத்தில் அதை போடுகின்றனர். அதில் தங்கம் உட்பட என்னென்ன கனிமம் உள்ளது என்பது தெரியவருகிறது. இதுதான் Fire assay முறை எனப்படுகிறது.
இதுவே தங்கத்தின் தரத்தை அறிவதற்கான பிஐஎஸ் பரிந்துரைத்த அதிமுக்கிய பரிசோதனை முறையாகவுள்ளது.
பிபிசியிடம் பேசிய சாய் பிரசாந்த், ''தங்கத்தில் ரீனியம் கலந்திருந்தால், அதனால் வாடிக்கையாளர்களுக்கு சவரனுக்கு ரூ.20 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது உண்மைதான். இதேபோன்று தங்கத்தில் வெவ்வேறு உலோகக் கலப்பு புகார்களை நாங்கள் சந்தித்திருக்கிறோம். தங்கத்துக்கும், ரீனியத்துக்கும் உருகுநிலை, அடர்த்தியில் பெரிய வித்தியாசம் உள்ளது. ரீனியம் கடினமான உலோகம். தங்கம் 1064 டிகிரி செல்சியஸில் உருகிவிடும். ஆனால் ரீனியம் 3200 டிகிரி செல்சியஸ் அளவில்தான் உருகும்.'' என்றார்.
அதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''இதனால் தங்கம் உருகிய பின் ரீனியம் உருகாமல் இருக்கும் என்பதால் அது தனித்திருக்கும். வேறு வகையில் தங்கத்தில் அதைக் கலந்தாலும் பரிசோதனை முறைகளில் தெரிந்துவிடும். முதலில் 24 காரட் தங்கத்தை உருக்கும்போதே பிஐஎஸ் அனுமதித்த கனிமங்களை மட்டுமே சேர்ப்போம். அப்போதே அது 916 ஹால் மார்க்கிங்கிற்கு உரிய 22 காரட் தூய தங்கமாக மாறிவிடுகிறது. அதன்பின் தங்கத்தின் மாதிரிகளை Fire assay முறையில் பரிசோதிக்கும்போது, அதில் எந்த கனிமம் எந்த அளவில் இருக்குமென்பது தெரிந்துவிடும்.'' என்றார்.
தற்போது சமூக ஊடகங்களால் ரீனியம் கலப்படம் என்ற தகவல் வேகமாகவும், பல மடங்கு பொய்களுடனும் பரவுவதாகச் சொல்லும் தங்க நகைக்கடை மற்றும் தங்கப்பட்டறை உரிமையாளர் கெளசிக், நகையின் தரத்தைக் கண்டறிவதற்கு பல்வேறு பரிசோதனை முறைகள் இருப்பதாகச் சொல்கிறார்.
இவர் கோயம்புத்தூர் தங்கநகை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.
பிபிசியிடம் பேசிய கெளசிக், ''தங்கத்துக்கு ஹால் மார்க்கிங் சான்று வழங்கும்போதே, அதன் சோதனை அறிக்கையில் அந்த நகையில் எவ்வளவு தங்கம், எவ்வளவு வெள்ளி, எவ்வளவு காப்பர் இருக்கிறது போன்ற விபரங்கள் தெளிவாக வந்து விடுகிறது. பொதுவாக 24 காரட் தங்கத்தில் காப்பர், வெள்ளி சேர்த்தால்தான் 22 காரட் தங்கமாகிறது. தங்கத்திற்கு ஹால்மார்க் சான்று பெற எந்தெந்த கனிமங்களைச் சேர்க்கக்கூடாது என்பதையும் பிஐஎஸ் தெளிவுபடுத்தியிருக்கிறது. பிஐஎஸ் ஹால் மார்க் சான்று இருக்கும் நகைகளை நம்பி மக்கள் வாங்கலாம்.'' என்றார்.
''ஹால் மார்க்கிங் தரச்சான்று மையங்களிலும், நகைக்கடைகளிலும் எக்ஸ்ஆர்எஃப் (XRF) இயந்திரத்தில் தங்கத்தின் தரத்தை தெரிந்து கொள்ளலாம். அதைவிட Fire assay முறையில், நீங்கள் தரும் தங்கநகை அல்லது தங்கக்கட்டியை உருக்கி, அதில் கலந்துள்ள கனிமங்கள் என்னென்ன என்பதை கண்டறியலாம். இதுவரை 18 கனிமங்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் எக்ஸ்ஆர்எஃப் இயந்திரத்தில் இருந்தது. அவற்றில் ரீனியம் இல்லை. இப்போது இந்த சர்ச்சை எழுந்தபின், 2 நாட்களுக்கு முன் அதில் ரீனியத்தையும் சேர்த்துள்ளோம். அதனால் ரீனியம் கலப்பையும் எக்ஸ்ஆர்எஃப் சோதனையில் கண்டறிய முடியும்.'' என்றார் கெளசிக்.
தங்கத்துடன் ரீனியத்தை கலந்திருந்தால் எப்படி கண்டறிவது?
ஆனால் ரீனியத்தை பொடியாக்கி தங்கத்துடன் கலப்பதை தற்போது பயன்பாட்டிலுள்ள எக்ஸ்ஆர்எஃப் அல்லது டிஆர்எக்ஸ்ஆர்எஃப் (TRXRF–Total Reflection X-Ray Fluorescence) போன்ற இயந்திரங்களால் எளிதில் கண்டறிய முடியாது என்கிறார் கோவை அரசு கலைக்கல்லூரியின் வேதியியல் துறை இணை பேராசிரியர் ராமசுப்பு.
வழக்கமாக 24 காரட் தங்கத்தில் துத்தநாகம் அல்லது செம்பு மற்றும் வெள்ளி கலந்து 22 காரட் ஆக்கப்படும் நிலையில், ரீனியத்தின் மதிப்பு மிகவும் குறைவு என்பதால் அதைக் கலப்பதன் மூலமாக அதிகளவு லாபத்தை ஈட்டுவதற்கு முயற்சி நடக்க வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது என்கிறார் அவர்.
பிபிசியிடம் இதுபற்றி விளக்கிய பேராசிரியர் ராமசுப்பு, ''ரீனியம் என்பது கிட்டத்தட்ட தங்கத்தை விட சற்று அடர்த்தி அதிகமான கனிமம். ரீனியத்தின் அடர்த்தி ஒரு மில்லி மீட்டருக்கு 21.02 கிராம். அதுவே தங்கத்துக்கு 19.29 கிராம். இரண்டுக்கும் ஏறத்தாழ ஒரே அளவு ஒப்பு அடர்த்தி உள்ளது. இதைச் சேர்க்கும்போது தங்கத்தின் அளவு மாறுபடாது. எடை சற்று கூடத்தான் செய்யும். ரீனியத்தை பொடியாக தங்கத்தில் கலக்க முடியும். எந்தவொரு ஆபரணத்தங்கத்தையும் எக்ஸ்ஆர்எஃப் இயந்திரத்தில் ஆய்வுக்கு உட்படுத்தும்போது, சில மைக்ரான் அளவில் மட்டுமே எக்ஸ்ரேக்களை கண்டறிந்து அதன் துாய தன்மையைக் கண்டுபிடிக்கும். ரீனியத்தின் ஒப்புமை அடர்த்தி, எக்ஸ் கதிர்களின் தன்மை (எலக்ட்ரான் வோல்ட் அளவு) கிட்டத்தட்ட தங்கம் அளவுக்கு இருப்பதால் எக்ஸ்ஆர்எஃப் இயந்திரத்தில் இந்த கலப்படத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.'' என்றார்.
தங்கத்தின் மதிப்பை ஒப்பிடுகையில் ரீனியத்தின் மதிப்பு மிகவும் குறைவு என்று சுட்டிக்காட்டும் அவர், அதிக அளவில் வாங்கினால் ஒரு கிலோ ரீனியமே ஆயிரம் ரூபாய்க்கும் கூட வாங்க முடியும் என்கிறார்.
இதனால் தங்கத்துடன் இதைக் கலக்கும்போது, அதன் அளவைப் பொருத்து 40 முதல் 50 மடங்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் பேராசிரியர் ராமசுப்பு விளக்குகிறார்.
''ஆனால் எப்மா (EPMA-Electron Probe Microanalysis) தொழில்நுட்பத்துடன் டபிள்யு.டி.எக்ஸ்.எஸ். (WDXS Wavelength-dispersive X-ray spectroscopy Wavelength spectroscopy) தொழில்நுட்பத்தை இணைத்து பார்க்கும்போது, உள்ளேயிருந்து வரக்கூடிய எலக்ட்ரான்களை (எக்ஸ்ரேயாக வரும்) வைத்து மில்லி மீட்டர் அளவுக்கு உள்ளே வேறு உலோகம் கலந்திருந்தாலும் கண்டுபிடிக்க முடியும். அதேபோன்று தங்கம் மற்றும் ரீனியத்தின் எல் ஆல்பா, எல் பீட்டா அலைநீளங்கள் வெவ்வேறு என்பதால் அதையும் தெளிவாகப் பிரித்துக்காட்டிவிடும் என்பதால் தங்கத்திலுள்ள கலப்படத்தைத் தெளிவாகக் கண்டறிந்து விட முடியும்.'' என்றார் பேராசிரியர் ராமசுப்பு.
தற்போது தங்கக் கலப்படத்தைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப முறைகள் அனைத்தும், இரண்டு தலைமுறை பழமையானவை என்பதால் அதை நவீனப்படுத்துவது காலத்தின் கட்டாயம் என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் கோவை வளாக நானோ டெக்னாலஜி துறை தலைவர் ராஜசேகர் கிருஷ்ணன்.
தங்கக் கலப்படத்தைக் கண்டறிவது ஒன்றும் ராக்கெட் அறிவியல் அல்ல என்று கூறும் அவர், ஆனால் அதற்கான வாய்ப்புகள் இப்போது மிகமிகக்குறைவாக இருப்பதாகச் சொல்கிறார். எப்மா முறையே சிறந்தது என்று கூறும் அவர், ஆனால் தற்போது பெங்களூருவில் மட்டுமே அந்த பரிசோதனை வசதியுள்ளது என்கிறார்.
பிபிசியிடம் பேசிய பேராசிரியர் ராஜசேகர், ''எக்ஸ்ஆர்எஃப் என்பது மேலோட்டமாக, பாலில் பாலாடையிலுள்ள கலப்படத்தை மட்டும் அறிவது போன்றது. ஆனால் எப்மா என்பது பாலின் அடிப்பகுதி வரை ஊடுருவி அதன் தன்மையைக் கண்டறிவதாகும். அதாவது ஒரு கல்லில் ஒரு கிராம் அளவுக்கு தங்க முலாம் பூசி அதை எக்ஸ்ஆர்எஃப் இயந்திரத்தில் கொடுத்தால், அதில் ஒரு கிராம் தங்கம் இருப்பதாகவே அது காண்பிக்கும். அது மைக்ரான் அளவில்தான் ஊடுருவும். எப்மா என்பது உள்ளே 5 செ.மீ. வரை ஊடுருவும் என்பதால் 99.9 கலப்படத்தைக் கண்டறிந்துவிடும். அதிகளவு ஆற்றல் கொண்ட எக்ஸ்ரே தொழில்நுட்பம் இது என்பதால் பொடியாகவோ, கம்பியாகவோ எதைக் கலந்திருந்தாலும் அதில் ஊடுருவிக் கண்டுபிடித்துவிடும்.'' என்றார்.
''எனவே மத்திய அரசோ, மாநில அரசோ நடவடிக்கை எடுத்து, தமிழகத்தை 5 மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் எப்மா பரிசோதனை மையத்தை உருவாக்கினால் மக்கள் நம்பிக்கையாக தங்கம் வாங்கமுடியும்.'' என்றார் பேராசிரியர் ராஜசேகர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு