திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று (நவம்பர் 24) தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள தடை உத்தரவு, பக்தர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவைப் பிறப்பித்தபோது, நவம்பர் 20-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இன்று தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தது. ஆனால், அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாமல் போகலாம் என மனுதாரர்கள் அச்சம் தெரிவித்திருப்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், "மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மலையின் மீது அங்கீகாரம் இல்லாத நபர்கள் ஏறுவதைத் தடுப்பதற்காக மட்டுமே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எங்களிடம் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இந்தத் தடை உத்தரவு பொருந்தாது என்பதைத் தெளிவுபடுத்தும் அதன் குறிப்பிட்ட அம்சத்தையும் எங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கவே தாம் செயல்பட்டதாகவும், தொடர்ந்து செயல்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 144-வது பிரிவு, இந்தியாவின் எல்லைக்குள் உள்ள அனைத்து அதிகார அமைப்புகளும் உச்சநீதிமன்றத்திற்கு உதவியாகச் செயல்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. மாவட்ட ஆட்சியர் ஒரு சிவில் நிர்வாக அதிகாரி என்பதால், இந்தப் பிரிவு அவருக்கும் முழுமையாகப் பொருந்தும்.
கடந்த ஆண்டு கார்த்திகை தீப நிகழ்வின்போது அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை வெளிப்படையாக மீறியதால், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ள ஒரு பொது ஊழியர் என்பதையும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணான எந்தவொரு ஆலோசனையையும் அவர் புறக்கணிக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டுவது அவசியம் எனக் கருதுகிறோம். சீராய்வு மனு நிலுவையில் இருப்பது, உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாமல் இருப்பதற்கான காரணமாக இருக்க முடியாது" என்று தெரிவித்தது.
அரசமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பக்தர்கள் பயன்படுத்துவதற்குத் தடை உத்தரவு தடையாக இருக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் கோயில் நிர்வாகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவைத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையின் போது அரசு தரப்பு வாதம்
விசாரணையின் போது, மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், தற்போது கோயிலில் பக்தர்கள் செல்வதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும், பக்தர்கள் கோயிலுக்குச் சென்று வருவதுடன் அவர்களுக்கு அனுமதிச் சீட்டுகளும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
"பக்தர்களின் நடமாட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் இந்தத் தடை உத்தரவைப் பயன்படுத்துவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று அவர் கூறினார். தடுத்து வைக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட சில அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தத் தடுப்புக் காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மொத்தம் 258 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு மட்டுமல்லாமல், மலை அடிவாரம் மற்றும் அதற்கு அப்பால் செல்வதற்கும் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் அமல்படுத்தப்பட்டுள்ள தடை உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) அறிவுறுத்தியுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவு வழங்கும் மதத்தைப் பின்பற்றுவதற்கும், மத நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்குமான பக்தர்களின் உரிமைக்குத் தடையாக அமையக்கூடும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, "இந்த உத்தரவைப் பிறப்பிப்பதன் மூலம் எல்லாமே சீர்குலைந்துவிடும். அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவு வழங்கும் உரிமைகளைச் செயல்படுத்துவதற்கு அவர்கள் தடையாக இருக்க வேண்டாம்" என்று நீதிபதிகள் வாய்மொழியாகக் கருத்துத் தெரிவித்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை அன்றைய தினம் மாலை 4 மணிக்கு ஒத்திவைத்தனர். ஆட்சியர் நேரில் ஆஜராகும் வரை அவரது தரப்பு வாதங்களைக் கேட்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
நீதிமன்றத்தில் காலை விசாரணையின் போது என்ன நடந்தது?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று தீபம் ஏற்ற அனுமதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் பிஎன்எஸ்எஸ் 163-வது பிரிவின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியர் நேற்று தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், பக்தர்கள் ஒன்றுகூடுவதற்கும், தீபம் ஏற்றப்படுவதை மலையடிவாரத்தில் நின்று காண்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இன்று காலை விசாரணையின் தொடக்கத்தில், இந்த மனுக்களை ஏன் தாக்கல் செய்தீர்கள் என்று மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முற்றிலும் முரணானது என்றும், இது நீதிமன்ற அவமதிப்பாக அமையும் என்றும் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், "நிஷாந்த் (மதுரை மாவட்ட ஆட்சியர்) உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ளத் துணிந்திருந்தால், அவர் அதைச் செய்யட்டும். இந்த உத்தரவை எந்த அடிப்படையில் எதிர்க்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினர்.
மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த தடை உத்தரவின் உள்ளடக்கத்தை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாசித்த போது, "இந்த உத்தரவை யார் தயாரித்திருந்தாலும் அவரைப் பாராட்ட வேண்டும். மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மற்றொரு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், மக்கள் அந்தப் பகுதிக்கு வருவதைத் தடுத்து வருவதாகவும், ராமேஸ்வரத்தில் இருந்து வந்தவர்கள்கூட கைது செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
அப்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்துவதற்காக இந்த அமர்வு அமரவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
"உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நான் படித்திருக்கிறேன். 'மாநில அரசு கோரினால்' மத்திய அரசு சிஆர்பிஎஃப் படையினரின் உதவியை வழங்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மாநில அரசு அத்தகைய கோரிக்கையை முன்வைக்கவில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று நீதிபதி சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே, பக்தர்கள் கைது செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த அவர், கைது நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் தன்னிடம் இல்லை என்றும், அந்தக் குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும் தாம் கூறவில்லை என்றும் தெரிவித்தார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக நீதிபதி சுவாமிநாதன் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த கோபால் சங்கரநாராயணன், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்துவது தொடர்பாகவே இந்த மனுக்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பான விவகாரங்களை உச்ச நீதிமன்றத்திலேயே முறையிடுவதுதான் சரியானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்தபோது அவரது மனதில் என்ன இருந்தது என்று நீதிபதி சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த கோபால் சங்கரநாராயணன், "நவம்பர் 20-ஆம் தேதி முதலே அவர் (மாவட்ட ஆட்சியர்) உத்தரவைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்" என்றார்.
மத உரிமையைச் செயல்படுத்தத் தடையாக இருக்கக் கூடாது: நீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தாண்டி தங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றாலும், உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிடும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள், "இங்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, மலை உச்சியில் தீபம் ஏற்றுவது. அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பாருங்கள், அனைவரும் கிரிவலம் செல்ல விரும்புவார்கள். அந்தப் பகுதிக்குச் சென்று தரிசனம் செய்ய விரும்புவார்கள். இந்தத் தடை உத்தரவைப் பிறப்பிப்பதன் மூலம் எல்லாமே சீர்குலைந்துவிடும். அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவு வழங்கும் உரிமைகளைச் செயல்படுத்துவதற்கு அவர்கள் தடையாக இருக்க வேண்டாம்" என்று தெரிவித்தனர்.
அவசர முறையீட்டின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆட்சியர், காவல் ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது ஏன்?
இதற்கு முன்னதாக, இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என்பதற்காக வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், இந்த விவகாரம் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிப்பது பொருத்தமாக இருக்காது என்று தெரிவித்திருந்தார்.
நவம்பர் 24-ஆம் தேதி ஒருமுறை மட்டும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், அதைச் செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் தற்போது அந்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, இந்த வழக்கை பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகாவிட்டால் அவரது தரப்பு வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்கப் போவதில்லை என்று நீதிமன்றம் அப்போது தெரிவித்திருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து கடந்த 20ஆம் தேதி உத்தரவிட்டது. நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அதேநேரத்தில், அங்கு தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக 'லைவ் லா ' செய்தி குறிப்பிட்டது.
ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதிப்பதை, அங்கு தீபம் ஏற்றுவது பாரம்பரிய வழக்கம் என்ற கோரிக்கைக்கு அளிக்கப்பட்ட இறுதி அங்கீகாரமாகக் கருதக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் லைவ் லா தெரிவித்துள்ளது.
அச்செய்தியின்படி, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அனுமதியை, எந்தவொரு தரப்பினரும் நிறுவப்பட்ட பழக்கவழக்கத்துக்கான ஆதாரமாகக் கருத முடியாது என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இதேபோன்ற வழிபாடுகளைக் கோருவதற்கு இதைப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களும் அரசு அதிகாரிகளும் மட்டுமே தீபம் ஏற்றுவதற்காக மலை உச்சிக்குச் செல்லலாம் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவை மற்றும் நடைமுறை சாத்தியத்தைப் பொறுத்து மத்திய ரிசர்வ் காவல் படையினரை பணியில் ஈடுபடுத்துவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
தீபம் ஏற்றுவதற்கான நேரம், செல்லும் பாதை உள்ளிட்ட ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமே முடிவு செய்ய வேண்டும். தீபம் ஏற்றியதும் அந்தக் குழுவினர் உடனடியாக அங்கிருந்து திரும்ப வேண்டும் என்றும், அங்கு எந்தவிதமான கட்டுமானப் பணிகளோ, கட்டமைப்பு மாற்றங்களோ மேற்கொள்ளக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரத்தில், மலைப்பகுதியில் உள்ள வழக்கமான வழிபாட்டுத் தலங்களிலும், சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் மசூதியிலும் வழிபாடுகள் தடையின்றி நடைபெறுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
தீபம் ஏற்றப்பட்ட மூன்று நாட்களுக்குள் அது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறையாகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு