திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் ஆஜராகும் வரை அவரது தரப்பு வழக்கறிஞரின் வாதங்களைக் கேட்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள தடை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று (நவம்பர் 24) நண்பகல் 12.30 மணிக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, மாவட்ட ஆட்சியரும் மதுரை மாநகரக் காவல் ஆணையரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளனரா என்று நீதிபதிகள் கேட்டனர். இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார். அப்போது, ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், அவரது அலுவலகம் உயர் நீதிமன்றத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில்தான் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
ஆட்சியர் நேரில் ஆஜராகும் வரை அவரது தரப்பு வாதங்களைக் கேட்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், அதனால் மாவட்ட ஆட்சியர் தற்போது பணியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கோபால் சங்கரநாராயணன் கூறினார். வழக்கை பிற்பகல் 3 மணிக்கு விசாரிக்க முடியுமா என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆனால், ஆட்சியர் விரைவில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதால், உயர் நீதிமன்றம் இதை விசாரிப்பது பொருத்தமாக இருக்காது என்று வழக்கறிஞர் வாதிட்டார்.
அதற்கு, இந்த வழக்கை விசாரிப்பது பொருத்தமற்றது என்று கருதினால் அமர்வில் வாதங்களை முன்வைக்க வேண்டாம் என்றும், ஆனால் நீதிமன்றம் வழக்கை விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆட்சியர் நேரில் ஆஜராகும் வரை அவரது தரப்பு வாதங்களைக் கேட்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அப்பகுதியில் 5,000-க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் நகர், மலைப்பகுதி, கிரிவலப் பாதை உள்ளிட்ட பகுதிகள் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றத்திற்குள் நுழையும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர சோதனைக்குப் பிறகே பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் என களத்தில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் சிராஜ் தெரிவிக்கிறார்.
வழக்கமாகத் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு முன்புள்ள கல் மண்டபம் வரை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆனால், இந்த முறை வாகனங்கள் அந்தப் பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. கல் மண்டபத்திலிருந்து வெகு தொலைவிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
கோயிலுக்கு வழிபாடு நடத்த வரும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
கல் மண்டபத்திலிருந்து பார்க்கும்போது, மலையில் வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் தெளிவாகத் தெரிகிறது. அங்கு தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதேநேரத்தில், உச்ச நீதிமன்றம் தீபம் ஏற்ற அனுமதித்துள்ள தூணும் அங்கிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அந்தப் பகுதியில் காவல்துறையினர் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோயில் நிர்வாகத்தின் சார்பில் அந்தத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும், தூணைச் சுற்றிலும் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளதாகவும் செய்தியாளர் சிராஜ் தெரிவிக்கிறார்.
திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்ட சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த தடை உத்தரவு என்ன?
மதுரையில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேற்று தடை உத்தரவு பிறப்பித்தார். நவம்பர் 23-ம் தேதி இரவு 9 மணி முதல் நவம்பர் 25-ம் தேதி காலை 10 மணி வரை அனுமதியற்ற கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும், மலை ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான வழிபாடுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிரோன் பறக்க தடை செய்யப்பட்ட சிவப்பு மண்டலமாக காவல்துறை அறிவித்துள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று விசாரித்தது.
மதுரை மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவால் கார்த்திகை தீபத் திருநாளன்று பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் செல்வதற்கும், தீபம் ஏற்றப்படுவதைப் பார்ப்பதற்கும் பாதிப்பு ஏற்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து கடந்த 20ஆம் தேதி உத்தரவிட்டது. நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அதேநேரத்தில், அங்கு தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக 'லைவ் லா ' செய்தி குறிப்பிட்டது.
ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதிப்பதை, அங்கு தீபம் ஏற்றுவது பாரம்பரிய வழக்கம் என்ற கோரிக்கைக்கு அளிக்கப்பட்ட இறுதி அங்கீகாரமாகக் கருதக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் லைவ் லா தெரிவித்துள்ளது.
அச்செய்தியின்படி, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அனுமதியை, எந்தவொரு தரப்பினரும் நிறுவப்பட்ட பழக்கவழக்கத்துக்கான ஆதாரமாகக் கருத முடியாது என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இதேபோன்ற வழிபாடுகளைக் கோருவதற்கு இதைப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களும் அரசு அதிகாரிகளும் மட்டுமே தீபம் ஏற்றுவதற்காக மலை உச்சிக்குச் செல்லலாம் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவை மற்றும் நடைமுறை சாத்தியத்தைப் பொறுத்து மத்திய ரிசர்வ் காவல் படையினரை பணியில் ஈடுபடுத்துவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
தீபம் ஏற்றுவதற்கான நேரம், செல்லும் பாதை உள்ளிட்ட ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமே முடிவு செய்ய வேண்டும். தீபம் ஏற்றியதும் அந்தக் குழுவினர் உடனடியாக அங்கிருந்து திரும்ப வேண்டும் என்றும், அங்கு எந்தவிதமான கட்டுமானப் பணிகளோ, கட்டமைப்பு மாற்றங்களோ மேற்கொள்ளக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரத்தில், மலைப்பகுதியில் உள்ள வழக்கமான வழிபாட்டுத் தலங்களிலும், சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் மசூதியிலும் வழிபாடுகள் தடையின்றி நடைபெறுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
தீபம் ஏற்றப்பட்ட மூன்று நாட்களுக்குள் அது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறையாகும்.
கூடுதல் தகவல்: பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு