திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் சர்வே தூண்(GTS) அமைந்துள்ளதாக, தமிழ்நாடு அரசின் நில அளவைத் துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள 484 நில அளவைக் கற்கள் நேரில் அடையாளம் காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது' என, அரசின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'அவை ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் நிலப்பரப்பை அளப்பதற்காக அமைக்கப்பட்ட முக்கோணவியல் நில அளவைத் தூண்கள்' எனவும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள மலையின் உச்சியில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது.
'இதன் அருகில் உள்ள தூணில் கார்த்திகை நாளில் தீபம் ஏற்றலாம்' எனக் கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.
கார்த்திகை தீப நாள் நெருங்கி வருவதால், தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றிக் கொள்ளலாம்' எனக் கடந்த வாரம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்தநிலையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண், நிலப்பரப்பை துல்லியமாக அளப்பதற்காக பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நிலஅளவைத் தூண் (GTS)' என ஆய்வறிக்கை ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் நில அளவை மற்றும் தீர்வைகள் துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆகியவை இதனைத் தயாரித்துள்ளது.
ஆய்வறிக்கை கூறுவது என்ன?
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நிலஅளவை தொடர்பான அனைத்து ஜிடிஎஸ் (Great trigonometrical survey) நிலையங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்துமாறு தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வறிக்கையை வெளியிடுவதற்கு வருவாய்த்துறை அனுமதி அளித்துள்ளது. அதில், சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கு அருகில் அமைந்துள்ள கல் தூண், நில அளவைக் கல் எனவும் தர்காவுக்கு கீழே அமைந்துள்ள இடமே 'விளக்கு ஏற்றும் தூண்' எனவும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான வரைபடமும் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள ஜிடிஎஸ் நிலையத்தில் இருந்து நாகமலை, சதுரகிரி, கோபால்சுவாமி மலை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பொன்னுருக்கி மலை மற்றும் பெருமாள் மலை உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்பட்ட முக்கோண அளவீடுகளும் பிரிட்டிஷ் காலத்தில் உள்ள ஜிடிஎஸ் தொடர்பான அறிக்கையில் உள்ள மதிப்புகளுடன் ஒத்துப் போவதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.
நில அளவைப் பணியில் முக்கோண அளவீட்டு முறை மூலம் ஜிடிஎஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஓர் அடிப்படைக் கோட்டை ஆதாரமாகக் கொண்டு அருகில் உள்ள புள்ளிகளுக்கு இடையிலான கோணங்களை அளவிட்டுள்ளனர்.
'14 அடி உயரம் வரை கல் தூண்கள்'
மலைக் குன்றுகள் நிறைந்த நிலப்பரப்புகளில் தெளிவான கோடுகள் கிடைத்ததால் முக்கோண அளவீட்டுப் புள்ளிகளை நிர்ணயிப்பது எளிதாக இருந்துள்ளது. அதேநேரம், சமவெளிப் பகுதிகளில் தெளிவான கோடுகள் கிடைப்பது குறைவாக இருந்ததால் அதிக எண்ணிக்கையிலான ஜிடிஎஸ் நிலையங்களை ஆங்கிலேயர்கள் அமைத்துள்ளனர்.
அதன்படி, முக்கோணவியல் அளவீட்டை முதன்மை நிலையங்கள் மற்றும் சிறிய நிலையங்கள் என வகைப்படுத்தியுள்ளதாகக் கூறும் ஆய்வறிக்கை, 'பெரிய நிலையங்களில் 3 முதல் 4 அடி விட்டமும் 1 முதல் 14 அடி உயரமும் கொண்ட திடமான கற் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன' என்கிறது.
'இவை பொதுவாக குன்றுகள் அல்லது மேடுகள் போன்ற உயர்ந்த நிலப்பகுதிகளில் காணப்படுகின்றன. சமவெளிகளில் செங்கல் அடிப்படையிலான தூண்களைக் கொண்ட கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன' எனவும் கூறப்பட்டுள்ளது.
சமவெளிப் பகுதிகளில் சுமார் 35 அடி உயரமுள்ள மரக் கம்பங்களை ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியுள்ளனர். அவற்றில் கோணங்களை அளவிடுவதற்கு தியோடலைட் கருவிகள் பொருத்தப்பட்டதாக அரசின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'தூணின் உச்சியில் குறியிடப்பட்ட கல்'
ஜி.டி.எஸ் நிலையங்களின் கட்டுமானத்தில் புள்ளிகள் மற்றும் மைய வட்டங்களைக் கொண்டு இடங்களைக் குறித்துள்ளனர். 'இந்தக் குறிப்புகள் அந்த இடத்திலேயே திடமான பாறை அல்லது கல் கட்டுமானக் கோவில்கள், குன்றுகள், மேடுகள் உள்ள தரையில் உறுதியான கற்களின் மீது பொறிக்கப்பட்டன' என ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்த நிலையங்களை தரைக்கு மேலே உயர்த்துவதற்காக ஓர் அடையாளக் கல் தரையில் பதிக்கப்பட்டு அதன் மேல் ஒரு மேடை அமைக்கப்பட்டு அதன் மீது மற்றொரு அடையாளக் கல் வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
நிலத்தை அளப்பதற்கான கருவிகளைத் தாங்கும் வகையில் கற்கட்டுமானத் தூண்கள் கட்டப்பட்டதாகவும் இவை எளிதில் அடையாளம் காணப்படுவதை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆய்வில் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 800க்கும் மேற்பட்ட ஜிடிஎஸ் நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 484 நிலையங்கள் நேரில் சென்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக, அரசு கூறுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக்கால முக்கோண அளவீட்டு ஆய்வுகளின்போது நிறுவப்பட்ட முதன்மை நிலையங்கள், ரோம எண்களால் குறிப்பிட்டுள்ளன. நில அளவீட்டை எளிதாக்கும் வகையில் முதன்மை நிலையங்களுக்கு அருகில் இரண்டாம் நிலை நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக, ஆய்வறிக்கை கூறுகிறது.
மலை உச்சிகளில் பெரும்பாலும் கல் தூண் வடிவிலான நிலையங்களே காணப்படுவதாகக் கூறும் ஆய்வறிக்கை, 'ஆவணப்படுத்தப்பட்ட 482 நிலையங்களில் சுமார் 63 நிலையங்கள் இத்தகைய கல் தூண்களைக் கொண்டுள்ளது' என்கிறது.
இவை கற்கள் மற்றும் மண்ணால் ஆன சதுர மேடையின் மீது உறுதியான வட்ட வடிவக் கட்டுமானத் தூணைக் கொண்டுள்ளது எனவும் தூணின் உச்சியில் குறியிடப்பட்ட கல் பதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவீடுகள் சிக்கந்தர் மலையில் நிறுவப்பட்டுள்ள தூணும் பாறையின் மேற்பரப்பில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகளும் (வட்டத்துக்குள் புள்ளி) நில அளவை நிலையத்தைக் (GTS) குறிப்பதை உறுதிப்படுத்துவதாக, நில அளவைகள் மற்றும் தொல்லியல் துறை தயாரித்துள்ள அறிக்கை கூறுகிறது.
'வழிபாட்டில் உள்ள கற் தூண்கள் எவை?'
நில அளவைத் துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் நேரடியாக மேற்கொண்ட ஆய்வில் தூண்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஆவணப்படுத்தப்பட்ட 63 கல் தூண்களில் சுமார் 19 தூண்கள் எண்ணெய் ஊற்றும் தூண்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. 19 தூண்கள் வழிபாட்டில் உள்ளதாகவும் சில தூண்கள் கைவிடப்பட்ட நிலையிலும் உள்ளன' என ஆய்வறிக்கை கூறுகிறது.
அந்த வகையில், வழிபாடு, சமய சூழல், கைவிடப்படுதல் எனப் பல நிலைகளில் இந்தத் தூண்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகலூர் மற்றும் பழனி போன்ற மலைக் கோவில்களுக்கு அருகில் ஜி.டி.எஸ் நிலையங்கள் உள்ளதாகக் கூறும் ஆய்வறிக்கை, 'மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள ஜிடிஎஸ் நிலையங்களின் அருகில் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அங்குள்ள தூண்கள் வழிபாட்டுக்குரியவையாக மாறியுள்ளன' என்கிறது.
சில இடங்களில் இத்தகைய தூண்கள் கருட ஸ்தம்பத்தின் ஒரு பகுதியாக ஒருங்கிணைப்பட்டுள்ளதாகவும் சுமார் 67 நிலையங்கள் விஷ்ணு, பெருமாள், ரங்கநாத சுவாமி, வெங்கடாசலபதி, பள்ளிகொண்ட பெருமாள், சிவன் ஆகிய கோவில்களுக்கு அருகில் அமைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில ஜி.டி.எஸ் நிலையங்கள் சமணச் சின்னங்கள், தர்காக்கள் மற்றும் தேவாலயங்களுக்கு அருகில் அமைந்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கோணவியல் அளவீடு தொடங்கிய பின்னணி
1757ஆம் ஆண்டு வங்காளத்தின் கடைசி நவாப் சிராத்-உத்-தௌலாவுக்கும் ராபர்ட் கிளைவ் தலைமையிலான கிழக்கிந்திய கம்பெனி படைக்கும் இடையே போர் நடைபெற்றது.
போரில் கிழக்கிந்திய கம்பெனி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வங்காளத்தில் பிரிட்டிஷ் ஆட்சி நிலைபெற்றது. அதேபோல், ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானுக்கு இடையே நடைபெற்ற நான்கு ஆங்கிலேய - மைசூர் போர்கள் (1767-1799)தென்னிந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்தை உறுதிப்படுத்தின.
ஆங்கிலேயர்களின் இத்தகைய வெற்றிக்குப் பிறகு வணிகம் மற்றும் நிர்வாக நோக்கங்களுக்காக இந்தியாவின் நிலப்பரப்பு மற்றும் இயற்கை வளங்களை முழுமையாக புரிந்து கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
அவற்றில் 1767 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'சர்வே ஆஃப் இந்தியா' முதன்மையான அமைப்பாக இருந்தது. வங்காளத்தின் தலைமை நில அளவையாளராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜேம்ஸ் ரென்னல் துல்லியமான மற்றும் உயர்தர வரைபடங்களை உருவாக்கினார்.
இதனால், 'இந்திய நில அளவையின் தந்தை' என அவர் அழைக்கப்படுகிறார். அவர் உருவாக்கிய 'பெங்கால் அட்லஸ்' மற்றும் 'மேப் ஆஃப் இந்துஸ்தான்' ஆகியவை குறிப்பிடத்தக்கவையாக பார்க்கப்படுகின்றன.
இந்தியாவின் முறையான நில வரைபடத்தை உருவாக்குவதற்கான, 'கிரேட் டிரிகோனோமெட்ரிக்கல் சர்வே ஆஃப் இந்தியா' பணிகள் 1802 ஆம் ஆண்டு தொடங்கின.
வருவாய் அளவை, நிலப்பரப்பு அளவை மற்றும் முக்கோணவியல் அளவை என மூன்று வகையான நில அளவைகளை கிழக்கிந்திய நிறுவனம் தொடங்கியது.
முக்கோணவியல் அளவை என்பது ஓர் அடிப்படைக் கோட்டில் இருந்து பரந்த நிலப்பரப்பு முழுவதும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட முக்கோணங்களால் உருவாக்கப்பட்டது.
திப்புவின் வீழ்ச்சிக்குப் பிறகு வெல்லஸ்லி பிரபு, இந்தியாவில் மூன்று முக்கிய அளவீடுகளைத் தொடங்கினார். இவற்றில் வில்லியம் லாம்ப்டன் மேற்பார்வையில் முக்கோணவியல் அளவீடு தொடங்கப்பட்டது.
1797ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் 33வது காலாட்படையைச் சேர்ந்த வில்லியம் லாம்ப்டன், 1799 ஆம் ஆண்டு புவியியல் மற்றும் கணித அளவீடு தொடர்பான தனது திட்டத்தை முன்மொழிந்தார்.
1802 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தனது பணியை அவர் தொடங்கினார். இந்தத் திட்டம் 1818 ஆம் ஆண்டு பெரும் முக்கோணவியல் அளவீடு (GTS) என அழைக்கப்பட்டது.
சென்னையில் உள்ள செயின்ட் தாமஸ் மலையின் ஒரு குன்றில் இருந்து இந்தப் பணிகளை வில்லியம் லாம்ப்டன் தொடங்கினார். 1841ஆம் ஆண்டு வரை இந்தப் பணிகள் நடந்தன.
இதற்காக 1 டன்னுக்கும் அதிக எடையுள்ள பிரமாண்ட தியோடலைட் கருவி பயன்படுத்தப்பட்டது. 12 கி.மீ நீளமுள்ள ஓர் அடிப்படைக் கோடும் 78 டிகிரி தீர்க்கரேகை நெடுகிலும் 2,400 கி.மீ வடக்கு-தெற்கு நீளத்துக்கு ஒரு பரந்த முக்கோண வலையமைப்பை உருவாக்குவது இதன் பணியாக இருந்தன.
மிகவும் மேம்பட்ட அளவீட்டு முறைகளில் ஒன்றாக அந்தக் காலத்தில் இவை பார்க்கப்பட்டன. இந்தப் பணிகளுக்கு நாடு முழுவதும் ஆங்கிலேய குழுவினர் சுற்றியபோது பலர் பலியானதாக தமிழ்நாடு அரசின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லாம்ப்டனின் தொலைநோக்குப் பார்வை, ஒரு சீரான புவி அளவியல் கட்டமைப்பின் மூலம் இந்தியாவை வரைபடமாக்குவதை நோக்கமாகக் கொண்ட பெரும் முக்கோணவியல் அளவீடாக உருவெடுத்தது.
அவருக்குப் பிறகு ஜார்ஜ் எவரெஸ்ட் இந்தத் திட்டத்தை முன்னெடுத்தார். நவீன இந்திய வரைபடவியலுக்கு அடித்தளமாக, பெரும் முக்கோணவியல் சர்வே (ஜிடிஎஸ்) விளங்குவதாக அரசின் ஆய்வறிக்கை கூறுகிறது.
'லாம்ப்டன் தொடங்கி வைத்த நிலஅளவை, இந்திய புவியியல் அறிவை மாற்றியமைத்தது. நிர்வாகம், வருவாய் மற்றும் திட்டமிடுதலை எளிதாக்கியது. கையால் வரையப்பட்ட வரைபடங்களில் இருந்து அறிவியல்பூர்வமாக ஒருங்கிணைக்கப்பட்ட புவி அளவியல் அமைப்புக்கு மாறியதாக, தமிழ்நாடு அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு