KITA FM, “Longest Cumulative Distance Covered in an Outdoor Running Campaign” என்ற பிரிவில் Malaysia Book of Records (MBOR) அங்கீகாரத்தைப் பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. மலேசியா தினம் 2026-ஐ முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட KITA FM Satu Nama Satu Suara பிரசாரத்தின் மூலம் இந்தச் சாதனை பதிவு செய்யப்பட்டது. இந்தப் பிரசாரத்திற்கு HURIX’S, Thong Guan, AEON Credit, Google Pixel மற்றும் BHPetrol ஆகிய நிறுவனங்கள் ஆதரவு வழங்கின.
இந்தப் பிரசாரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக Astro Audio-வின் கீழ் இயங்கும் 13 வானொலி நிலையங்களையும் உள்ளடக்கிய சமூக ஓட்ட நிகழ்வு அமைந்தது. ஒவ்வொரு வானொலி நிலையமும் தங்களது மாநிலங்களில் 3 முதல் 5 கிலோமீட்டர் வரையிலான ஓட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்தன.
Advertisement
இந்த ஓட்ட நிகழ்வுகள் அனைத்தும் இணைந்து மொத்தம் 63 கிலோமீட்டர் தூரத்தைப் பதிவு செய்தன. இது 63ஆவது மலேசியா தின கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையிலும், ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மலேசியர்களிடையேயான ஒன்றுபட்ட உணர்வை வலியுறுத்தும் Satu Nama Satu Suara என்ற கருப்பொருளைப் பிரதிபலிக்கும் வகையிலும் அமைந்தது.
இந்த சமூக ஓட்டம் பல்வேறு வயதினர், இனத்தினர் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த நேயர்களை ஒன்றிணைத்ததுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் சமூக ஒற்றுமையையும் ஊக்குவித்தது.
Astro Audio-வின் இயக்குநர் பிரியா தர்ஷினி பிரபாகரன், இந்தச் சாதனை நேயர்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவதுடன், ஒற்றுமையின் உணர்வைக் கொண்டாடுவதில் KITA FM-ன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார். மலேசிய தினத்தை முன்னிட்டு உருவாக்கப்பட்ட இந்தச் சாதனை, மலேசியர்களைத் தொடர்ந்து ஒன்றிணைக்கும் பயணம், ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்ட உணர்வைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் வெளிப்புற நேரலை ஒளிபரப்புகள், சமூக நடவடிக்கைகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
KITA FM தனது வெளிப்புற நேரலை ஒளிபரப்பு நிகழ்வுகளை 29 ஆகஸ்ட் 2026 அன்று தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான முழு ஒத்திகையையொட்டி தொடங்கியது. தொடர்ந்து, 31 ஆகஸ்ட் 2026 அன்று புத்ராஜெயா டத்தாரான் பகுதியில் நடைபெற்ற 69ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்தையொட்டி நேரலை ஒளிபரப்பையும் மேற்கொண்டது. அதன் பின்னர், நேயர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரசாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
சமூக ஓட்ட நிகழ்வுகளுக்கு மேலதிகமாக, Mini Showcase KITA FM நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் குவாந்தான், பினாங்கு, ஈப்போ மற்றும் ஜொகூர் பாரு உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
மேலும், சமூக நலனை முன்னிறுத்தும் வகையில் இலவச தலைக்கவச மாற்றுத் திட்டமும் ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. அவை குவாந்தான், கோலா திரெங்கானு, கோத்தா பாரு, கோத்தா கினபாலு மற்றும் கூச்சிங் ஆகிய பகுதிகளாகும். இந்த முயற்சி சமூகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
Astro Audio மற்றும் அதன் நேயர்களுக்கு இடையே தொடர்ந்து நிலவி வரும் வலுவான உறவையும் இந்தச் சாதனை பிரதிபலிப்பதாக பிரியா தெரிவித்தார். மேலும், Astro Audio ஏற்பாடு செய்த பல்வேறு முயற்சிகளுக்கு நேயர்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவையும் அவர் பாராட்டினார்.
KITA FM Satu Nama Satu Suara பிரசாரம், Astro Audio-வின் கீழ் இயங்கும் 13 வானொலி நிலையங்களை ஒன்றிணைத்து, வானொலி, பொழுதுபோக்கு, சமூக நடவடிக்கைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை ஒரே கொண்டாட்டத்தின் கீழ் கொண்டு வந்தது.
Malaysia Book of Records வழங்கிய இந்த அங்கீகாரம், சமூகத்துடனான Astro Audio-வின் தொடர்பை மேலும் வலுப்படுத்துவதுடன், மலேசியர்களுக்கு வானொலி அனுபவத்தை இன்னும் நெருக்கமாகவும் அர்த்தமுள்ளதாகவும் கொண்டு சேர்ப்பதில் மற்றுமொரு முக்கிய சாதனையாக அமைந்துள்ளது.