
குழந்தைகள் சம்பந்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களில், அவர்களை அடையாளம் காண வகை செய்யும் காணொலிகளைப் பகிர்வது, சட்டத்தை மீறும் செயலாக இருக்கலாம் !
சரவாக் கூச்சிங் பள்ளியில், அண்மையில் நடந்த தாக்குதல் தொடர்பான காணொலிகள் பரவி வருவதை அடுத்து, மலாயா பல்கலைக்கழகக் குற்றவியல் நிபுணர் ஒருவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் சட்டத்தின்படி, குற்றவியல் சம்பவங்களில் தொடர்புடைய குழந்தைகளை, அடையாளம் காணும் தகவல்களை வெளியிடுவது குற்றமாக இருக்கலாம், என்றாரவர்.
அந்தச் சட்டப் பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட குழந்தைகள், சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட குழந்தைகள் ஆகியோரையும் உட்படுத்தியதாகும்.
அத்தகைய காணொலிகள், காவல்துறை விசாரணையைப் பாதிப்பதுடன், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவவும், குழந்தைகள் மிரட்டல்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகவும் வழிவகுக்கும் என அவர் எச்சரித்தார்.
---------
இவ்வாண்டு, நாட்டில் நான்காவது மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளது !
சரவாக் சட்டமன்றம், அடுத்த வாரம் திங்கட்கிழமை கலைக்கப்படுவதாக, மாநில Premier Tan Sri Abang Johari Tun Openg அறிவித்துள்ளார்.
சட்டமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், டிசம்பர் மாத இறுதிக்குள், அங்கு தேர்தல் நடைபெற வேண்டும்.
---------
அரசு ஊழியர்களுக்கு Waze செயலியைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கப்போவதில்லை எனப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் !
Waze செயலியின் இஸ்ரேல் தொடர்பு மற்றும் அதைப் பயன்படுத்துவதற்கான சட்ட அதிகார வரம்பு குறித்து ஆராய்ந்த பின்னரே, அம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இணைய பாதுகாப்பு தொடர்பான கூட்டம், 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்றபோது, அது குறித்து ஆராய அதிகாரிகளுக்கு உத்தரவிடபட்டதாகவும் அவர் சொன்னார்.
--------
நேபாள பேரிடரில் மாயமான மலேசியர்களின் குடும்பங்களுக்கு, கடன் தவணைகளை ஒத்திவைப்பது உள்ளிட்ட நிதிச் சலுகைகளை, வங்கிகள் வழங்கியுள்ளன !
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ, அக்டோபர் தொடக்கத்திலேயே நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகவும், விண்ணப்ப நடைமுறைகளில் வழிகாட்ட, தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மலேசிய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
----------
சிலாங்கூர், நெகிரி செம்பிலான் உள்ளிட்ட மாநிலங்களின் 15 பகுதிகளில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு, 100-ரைக் கடந்து, ஆரோக்கியமற்ற அளவில் உள்ளது !